உள்ளூர் செய்திகள்
திருநங்கை கங்கா

வேலூர் மாநகராட்சியில் தி.மு.க. வேட்பாளராக திருநங்கை போட்டி

Published On 2022-02-01 16:39 IST   |   Update On 2022-02-01 16:39:00 IST
வேலூர் மாநகராட்சியில் ஆளும் கட்சியான தி.மு.க.வில் போட்டியிட கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தநிலையில் திருநங்கை ஒருவருக்கு சீட் வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக திருநங்கை கங்கா போட்டியிடுகிறார். ஓல்டு டவுன் உத்திரமாதா கோவில் பின்புறமுள்ள பகுதியில் வசித்து வரும் கங்கா ஏற்கனவே சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளேன். கடந்த கருணாநிதி ஆட்சியின் போது திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் பதவி வகித்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினேன்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினேன். இந்த பகுதியில் போர்வெல் சேதமடைந்தால் எனது சொந்த செலவில் அவற்றை சீரமைத்துள்ளேன். ஏழைகளுக்கு ஈமச்சடங்கு உதவியும் செய்து கொடுத்துள்ளேன்.

மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். எனது சமூக சேவைகள் குறித்து அவர்கள் விசாரித்தார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் எனக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து கண்டிப்பாக வெற்றி பெறுவேன். மக்கள் நலப் பணிகளில் திறம்பட செயலாற்றுவேன் என்றார்.

வேலூர் மாநகராட்சியில் ஆளும் கட்சியான தி.மு.க.வில் போட்டியிட கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தநிலையில் திருநங்கை ஒருவருக்கு சீட் வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறுகையில்:-

37-வது வார்டில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என அந்த பகுதி பொது மக்களிடம் நேரடியாக விசாரித்தோம். பொதுமக்கள் பலர் கங்காவிற்கு சீட் கொடுங்கள். அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றனர்.

மேலும் கங்காவுக்கு அந்த பகுதியில் நற்பெயர் மக்கள் செல்வாக்கு உள்ளது. அதன் அடிப்படையில் கட்சி மேலிடம் அவருக்கு சீட் வழங்கியுள்ளது என்றார்.

Similar News