உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்சவம்

Published On 2022-02-01 15:54 IST   |   Update On 2022-02-01 15:54:00 IST
திருநாங்கூரில், நாளை 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.
சீர்காழி:

108 வைணவ ஸ்தலங்களில், 11பெருமாள் கோயில்கள் சீர்காழி வட்டம் திருநாங்கூர் பகுதியில் சில கிலோமீட்டர் தூரங்களில் அருகருகே ஒரே தொகுப்பாக அமைந்துள்ளது. 

இங்கு மணிமாடக் கோயில் எனும் நாராயணப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவு 11 பெருமாள் கோயில்களின் உத்ஸவர்கள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை உத்ஸவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நாளை தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெறவுள்ளது. முன்னதாக இன்று அதிகாலை திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் புறப்பாடாகி குறவளூர், மங்கைமடம், காவாளம்பாடி, திருமேனிக்கூடம், பார்த்தன்பள்ளி ஆகிய பெருமாள் கோயில்களுக்கு சென்று பெருமாள்களுக்கு அழைப்பு விடுக்கும் ஐதீகமும், பின்னர் நைனிபுரம் மஞ்சள்குளி மண்டபத்தில் திருமங்கையாழ்வாருக்கு தீர்த்தவாரி மற்றும் மஞ்சக்குளி உத்ஸவமும் நடைபெறவுள்ளது.

அங்கிருந்து நாராயணபெருமாள், புருஷோத்தமன், வைகுண்டநாதர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்டபெருமாள், குடமாடுகூத்தர் ஆகிய கோயில்களுக்கு திருமங்கையாழ்வார் சென்று பெருமாள்களுக்கு அழைப்பு விடுத்து மீண்டும் நாராயண பெருமாள் கோயிலுக்கு இரவு அர்த்த ஜாமத்திற்கு எழுந்தருள்கிறார்.

தொடர்ந்து விழா அன்று காலைமுதல் நாராயணப்பெருமாள், குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்டபெருமாள், அண்ணன்பெருமாள், புருஷோத்தமன்பெருமாள், வரதராஜப்பெருமாள், வைகுந்தநாதப்பெருமாள், மாதவன்பெருமாள், பார்த்தசாரதிபெருமாள், கோபாலன்பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் மணிமாடக்கோயிலுக்கு எழுந்தருளிவரும், பெருமாள்களை திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடி கோயில் வாசலில் நின்று வரவேற்கும் ஐதீகமும் நடைபெறும்.

பின்னர் 11பெருமாள்களும், 11மாடங்களில் வைக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெறும்.பின்னர் இரவு 11பெருமாள்களும் தங்க கருடவாகனத்திலும், திருமங்கையாழ்வார் குமுதவள்ளிநாச்சியாருடன் ஹம்சவாகனத்திலும் எழுந்தருள்வர். இதைத்தொடர்ந்து தங்க கருடவாகனத்தில் எழுந்தருளும் 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகாதீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெறவுள்ளது.

இதனிடையே சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11பெருமாள் தங்க கருடசேவை விழாவையொட்டி ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கோட்டாட்சியர் ஜி.நாராயணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி.லாமெக், வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பெருமாள் வீதியுலா புறப்பாடு, வழிபாடு நிகழ்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிவதை உறுதிப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கோயில் நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் விழா கமிட்டியினர், விழா குழுவினர்கள் பங்கேற்றனர்.

Similar News