உள்ளூர் செய்திகள்
அம்மா கிளினிக் ஊழியர்கள் திடீர் போராட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்மா கிளினிக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பி பிளாக் வளாகத்தில் இன்று காலை அம்மா மினி கிளினிகில் பணியாற்றிய பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு அனுமதி இன்றி எந்தவித போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் கூறினர்.
அப்போது பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலகத்தில் மனு அளித்து விட்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் கூறுகையில்:-
நாங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக்குகளில் பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணியில் சேர்ந்தோம். தற்போது திடீரென அனைத்து அம்மா கிளினிக்குகளும் மூடப்பட்டு விட்டது.
அதற்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா மையங்களில் பணி தருவதாக கூறினார்கள்.
தற்போது அந்த பணியும் தரவில்லை. மேலும் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. எங்களது வாழ்வாதாரத்திற்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சம்பளம் வழங்க வேண்டும் என்றனர்.
இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.