உள்ளூர் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கி உள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக ஈரோடு மாநகராட்சியில் 443 வாக்குசாவடி மையங்கள், 4 நகராட்சிகளில் 153 வாக்குசாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குசாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குபதிவு நாளில் வாக்குசாவடி மையங்களில் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இதில் மாநகர் பகுதியில் 443 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 41 ஆயிரத்து 193 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
தேர்தல் பணியில் மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.
இதில் மாநகராட்சி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி இன்று ஈரோடு ரங்கம்பாளையத்தில் ஆர் .என்.எம். கல்லூரி மற்றும் அதே பகுதியில் உள்ள கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளி என இரண்டு இடங்களில் பயிற்சி நடைபெற்றது.
மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள், மாநகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், தேர்தல் பிரிவு உதவி ஆணையர் குமரேசன், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இதேபோல் பவானி நகராட்சியில் தேர்தல் பணிக்கு ஈடுபடும் ஊழியர்களுக்கு விஜயலட்சுமி கல்யாண மண்டபத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வைரவிழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சத்தியமங்கலத்தில் நகராட்சித் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பஞ்சாயத்து பள்ளியிலும் இன்று முதல் கட்ட பயிற்சி நடந்தது.
இதேப்போல் 42 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அந்தந்த பள்ளிகள், கல்லூரிகளில் இன்று முதல் கட்ட பயிற்சி நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்
இதில் வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், வாக்காளர்களை ஒழுங்கு படுத்துதல், மின்னணு வாக்குபதிவுவை எப்படி கையாள்வது? மின்னணு வாக்குப்பதிவு பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு சரி செய்வது போன்றவை குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பங்கேற்ற ஊழியர்களில் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்களுக்கு மேல் ஆனவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சிக்கு வந்த ஊழியர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அடுத்த கட்ட பயிற்சி வகுப்பு வருகின்ற 9-ந் தேதியும், இறுதி கட்ட பயிற்சி வகுப்பு 18-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.