உள்ளூர் செய்திகள்
இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த ராட்சத கடல் ஆமை.

கன்னியாகுமரி கடற்கரையில் 2-வது முறையாக இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை

Published On 2022-01-31 11:57 IST   |   Update On 2022-01-31 11:57:00 IST
கன்னியாகுமரி கடற் கரையில் இதுபோன்று ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.

இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி வனச்சரக அலுவலக வனச்சரகர் திலீபன் உத்தரவுபடி மருந்து வாழ்மலை வனக்காப்பாளர் பிரபாகரன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் உள்பட பலர் கன்னியாகுமரி கடற்கரைக்கு விரைந்து சென்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த ராட்சத கடல் ஆமையை மீட்டனர்.

பின்னர் அந்த ஆமையை பிரேத பரிசோதனைக்காக வாரியூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி கடற் கரையில் இதுபோன்று ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இப்போது 2-வது முறையாக ராட்சத கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு முன்பு கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அப்போது 30க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு படையெடுத்து வந்த வண்ணம் இருந்தன.

இதுபற்றி விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறும் போதும் இயற்கை மாற்றங்களின் காரணமாகவும் கடலில் ஏற்படும் சில சீதோசன நிலை காரணமாகவும் இது போன்று அடிக்கடி ராட்சத கடல் ஆமைகள் மற்றும் டால்பின் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் என்று கூறினார்கள்.

Similar News