உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

நாளை அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறப்பு - கூடுதல் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்த அனுமதி

Published On 2022-01-31 11:53 IST   |   Update On 2022-01-31 11:53:00 IST
நாளை அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படுகிறது. கூடுதல் மாணவர்கள் சேர்ந்த அரசு பள்ளிகளில் சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
திருச்சி:

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் திறந்து நேரடி வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும் கொரோனா தாக்கம் முடிவுக்கு வராத நிலையில் தினசரி வகுப்புகள் தேவையா? என்று சில பெற்றோர்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.  
     
கடந்த ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.  நடப்பு கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் மெட்ரிக், சி.பி.எஸ்.சி. வகுப்புகளில் படித்த மாணவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். இதனால் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது.
 

இதில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகள் கடந்த காலங்களில் சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் தப்பித்தன. இப்போது தினமும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில் கூடுதல் மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகள் திணறுகின்றன. திருச்சி பிராட்டியூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் கூடுதலாக 300 மாணவர்கள் சேர்ந்தனர்.

ஏற்கனவே 600 மாணவர்கள் இருந்த நிலையில் தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையும் 800-க்கு மேல் உள்ளது. இங்கும் போதிய வகுப்பறை வசதி கிடையாது. இதையடுத்து கட்டமைப்பு வசதி குறைவான அரசு பள்ளிகள் பழையபடி சுழற்சிமுறையிலேயே வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளன.

இதுபற்றி பிராட்டியூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஷாதேவி கூறும்போது, எங்கள் பள்ளியில் 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. கூடுதலாக 20 வகுப்பறைகள் இருந்தால் மட்டுமே தற்போதைய மாணவர் எண்ணிக்கைக்கு அனைவருக்கும் நேரடி வகுப்பு நடத்த இயலும். இதனை பள்ளிகல்வித்துறைக்கு தெரிவித்துவிட்டோம். அவர்களும் சுழற்சிமுறையில் வகுப்பு நடத்த அனுமதி அளித்துள்ளனர்.
 
நாளைக்கு 300 மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்பு நடத்தப்படும். கூடுதல் வகுப்பறை கட்ட அமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

இன்னொரு பள்ளி தலைமை ஆசிரியர் மெர்ஷிகிரேஸ் கூறும்போது, கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எட்டாக்கனியாகவே இருக்கிறது.பல மாணவர்களிடம்  இன்றளவும் ஸ்மார்ட் போன் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக வீடு,வீடாக சென்று மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறோம்.  நேரடி வகுப்புகள் இல்லாததால் பல குழந்தைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்புகின்றனர். ஆகவே ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். நேரடி வகுப்பினால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும் என்றார். 

Similar News