உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு- 100 சதவீத மாணவர்கள் வருகைக்கு ஏற்பாடு

Published On 2022-01-31 11:09 IST   |   Update On 2022-01-31 11:09:00 IST
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை (1-ந்தேதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் நாளை முதல் 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 முதல் 12-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் நாளை முதல் முழுமையாக செயல்பட உள்ளன.

 


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. நாளை மாணவர்கள் வகுப்புகளில் சுகாதாரமான முறையில் அமரும் வகையில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகத்தினர் மேற் கொண்டு உள்ளனர்.

மாணவர்கள் அமரும் இருக்கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளில் நாளை முழு அளவில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் ஒரு வாரம் கழித்து பள்ளிகளை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறிப்பிட்ட தனியார் பள்ளிகளில் இருந்து எஸ்.எம்.எஸ். மூலம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சில பள்ளிகள் 5-ந்தேதியில் இருந்து சிறிய வகுப்புகளுக்கு பாடம் நடத்த திட்டமிட்டுள்ளன.

9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாக பள்ளிகளில் பாடம் நடத்தப்பட்டு வந்தது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடை பெற்று வந்தன.

இந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அதற்கான வாகன வசதிகள் உள்ளிட்ட மற்ற வசதிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

அதன் காரணமாகவே தனியார் பள்ளிகள் சிறிய வகுப்புகளுக்கு நேரடி பாடம் நடத்துவதை தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளிக்கூடங்கள் நாளை முழுமையாக மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற் கொள்ளவும் பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் வழக்கமான குறிப்பிட்ட நேரத்துக்குள் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... உத்தர பிரதேசத்தில் டாக்டர் மகனை கடத்தி கொலை செய்த இரண்டு முன்னாள் ஊழியர்கள் கைது

Similar News