உள்ளூர் செய்திகள்
சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள் உருவம்.

ரசாயன பொடி தூவி தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2022-01-30 13:56 IST   |   Update On 2022-01-30 13:56:00 IST
செந்துறை அருகே பெண்களை குறிவைத்து ரசாயன பொடி தூவி கொள்ளையடித்து வந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில்  உள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக நில அளவையர், மருத்துவர், செவிலியர்  உள்ளிட்ட பலரிடம் ரசாயன பொடியை தூவி மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

பெண்களிடம் தங்களது துப்பட்டா வண்டியில் சிக்கியுள்ளது, சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறி 2 இளைஞர்கள் நூதன முறையில் ரசாயன பொடி தூவி கொள்ளையடிக்க முயற்சித்தனர்.    

ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் (வயது 50) என்பவர் செந்துறையில் இருந்து தனது ஸ்கூட்டரில் சொந்த ஊரான நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த அவரை பின்தொடர்ந்து வந்த அதே  இளைஞர்கள் 2 பேர் பழனியம்மாளிடம் தங்களது சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறியுள்ளனர்.

இதனை நம்பிய அவர்  வண்டியை  நிறுத்த முயற்சித்தபோது அந்த கொள்ளையர்கள் ரசாயன பொடி தூவி அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு கொண்டு தப்பி விட்டனர்.

இதுகுறித்து அவர் செந்துறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சம்பவம் நடந்த இடம் இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று கூறினர்.

அதனைத்தொடர்ந்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கிராம நிர்வாக அதிகாரி களிடம் எல்லைப் பிரச்சினை குறித்து கேட்டபோது, சம்பவம்  நடந்த இடம் உஞ்சினி வருவாய் எல்லைக்கு உட்பட்டது என்று கூறினர். இதையடுத்து இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.  

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த தொடர் கொள்ளை தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் மற்றும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தொடர்ந்து இந்த பகுதியில் கண்காணித்து வந்தனர்.

ஆங்காங்கே உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவின் மூலம் தேடி வந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேரை அடையாளம் கண்டு தேடிவந்தனர். இந்தநிலையில் அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் நடத்திய கொள்ளைய சம்பவங்களில் தொடர்புடைய நகைகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல்  செய்துள்ளனர்.

Similar News