உள்ளூர் செய்திகள்
வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்.

மீன் மார்க்கெட் இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

Published On 2022-01-30 13:53 IST   |   Update On 2022-01-30 13:53:00 IST
வேலூர் மீன் மார்க்கெட் இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் மீன் மார்க்கெட் மற்றும் மீன் இறைச்சி கடைகள் மூடிக்கிடந்தன.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு இன்று அமலில் இருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று காலை வேலூர் மீன் மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. 

அங்குள்ள அனைத்து கடைகளிலும் மீன்கள், ஆடு, கோழி இறைச்சி போன்றவை விற்பனைக்கு அதிகளவில் வைத்திருந்தனர்.

வேலூர் மீன் மார்க்கெட்டில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அங்குள்ள சில்லரை விற்பனை கடைகளில் மீன்கள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையானது.

இதேபோன்று  அங்குள்ள  இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மீன், இறைச்சி வாங்க மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமல் குவிந்து நின்றனர். அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்பட்டது.

சத்துவாச்சாரி மீன் இறைச்சி கடைகளிலும் அதிகளவில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். தொரப்பாடி, பாகாயம் சேண்பாக்கம் பகுதிகளில் மீன் இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட இன்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்துக்கொண்டு மீன் இறைச்சி வாங்கி சென்றனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மீன் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வேலூர் மீன் மார்க்கெட்டில் இன்று நண்டு கிலோ ரூ.500, இறால் ரூ.350 முதல் ரூ.450 வரையிலும், சங்கரா மீன் ரூ.350 முதல் 400 வரையிலும், கட்லா மீன் ரூ.200, வவ்வால் ரூ.350 முதல் 400 வரையிலும், மத்தி மீன்கள் ரூ.250 வரையிலும் விற்பனையானது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள்  அதிகம் கூடும் மீன்மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News