உள்ளூர் செய்திகள்
செய்யாறு அரசு பள்ளியில் படித்த 10 மாணவர்கள் மருத்துவ படிப்பில் தேர்வு
செய்யாறு பகுதி அரசு பள்ளியில் படித்த 10 மாணவர்கள் மருத்துவ படிப்பில் தேர்வாகியுள்ளனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்த 10 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.
செய்யாறு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவிகளும், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களும், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவனும் தேர்வாகியுள்ளனர்.
செய்யாறு அரசு மாதிரி மகளிர்மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ சீட்டு கிடைத்த மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் எம்.உமாமகேஸ்வரி தலைமைத் தாங்கினார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ரவிகுமார், பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் எம்.சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்த மாணவி பி.கவிபிரியா, எஸ்.சுவாதி மற்றும் பல் மருத்துவம் சீட் கிடைத்த மாணவிகள் ஏ.கோட்டீஸ்வரி, எம்.ஆர்த்தி, எஸ்.யாமினி, கே.ஹரினி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் ஏ.நளினி இனிப்பு வழங்கி மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், ஊக்கம் அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.