உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி மில் தலைமையாசிரியராக பணியாற்றும் அண்ணாமலை என்பவருக்கும், அதே பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியராக பணியாற்றி வரும் செழியன் என்பவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் சிறுசிறு பிரச்சினைகளை பெரியதாக்கி வாக்குவாதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பள்ளியில் வைத்து இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதை யாரோ மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய தகவல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கவனத்துக்கும் சென்றது. இதனால் அவர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை இன்று அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் கூறுகையில்:&
ஆசிரியர்கள் மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்று கிடைத்துவிடும். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.