உள்ளூர் செய்திகள்
படவேடு கோவில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பக்தர்கள் கோரிக்கை
படவேடு கோவில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
விரைவில் வருகிற 6&ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள இக்கோவிலில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவில் எதிரே உள்ள சாலையில் பாதுகாப்பு கருதி பேரிகார்டுகள் வைக்கப் பட்டுள்ளது.மாடவீதியில் பக்தர்கள் அனுமதியில்லை. இதனால் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் பக்தர்கள் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது.
மேலும் கோவில் செல்லும் சாலையில் ஏராளமான நடைபாதை கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். படவேடு கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் உள்ளது.
ஆனால் வாகனங்களை இங்கு நிறுத்தாமல் எவ்வித கட்டுப்பாடுமின்றி கோவிலுக்கு அருகே சாலையோரம் நிறுத்திவிடுகின்றனர்.
கோவில் செல்லும் சாலையில் நிறுத்துவதை தடுக்க வேண்டும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.