உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

Published On 2022-01-29 13:59 IST   |   Update On 2022-01-29 13:59:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கான முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
அரியலூர்:

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளும், 4 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளும் என மொத்தம் 81 வார்டுகள் உள்ளன.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 நகராட்சிகளும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய 2 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய 2 பேரூராட்சிகளிலும் தலா 15 வார்டுகளும் என மொத்தம் 69 வார்டுகள் உள்ளன.

இந்த வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து வேட்பு மனுவை பெறுவதற்காக மாவட்டங்களில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதை முன்னிட்டு மேற்கண்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

ஆனால் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் முதல் நாளில் யாரேனும் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்களா? என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழிமேல் விழி வைத்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சுயேச்சையாக போட்டியிட விரும்புபவர்களும் வரவில்லை.

Similar News