உள்ளூர் செய்திகள்
வேலூரில் நடுரோட்டில் அமர்ந்து தொழிலாளி திடீர் போராட்டம்
ஆஸ்பத்திரி காவலர் செல்போனை பறித்ததால் வேலூரில் நடுரோட்டில் அமர்ந்து தொழிலாளி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலூர்:
வேலூர் ஆர்.என். பாளையம் அப்துல்காதர் தெருவை சேர்ந்தவர் கவுஸ்ஷெரிப் (வயது42). பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.
இவருடைய தாயாரை சிகிச்சைக்காக இன்று வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த கவுஸ்செரீப் விரைவாக மருத்துவ படிவம் பெற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்த ஆஸ்பத்திரி காவலர் அவரை தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கவுஸ்செரீப் அவரது செல்போனில் படம் பிடித்தார்.
அப்போது ஆஸ்பத்திரி காவலர் ஒருவர் கவுஸ்செரீப் வைத்திருந்த செல்போனை பறித்தார்.
இதனை கண்டித்து கவுஸ்செரீப் ஆஸ்பத்திரி முன்பு ஆற்காடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும் கவுஸ்செரீப்பை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் இன்று காலை ஆற்காடு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.