உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி குப்பை லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் இன்று காலை மாநகராட்சி குப்பை லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-01-28 14:59 IST   |   Update On 2022-01-28 14:59:00 IST
ஈரோட்டில் இன்று காலை மாநகராட்சி குப்பை லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
ஈரோடு:

ஈரோட்டில் இன்று காலை மாநகராட்சி குப்பை லாரியை  பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், லாரிகள் மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பயோ மைனிங் சென்டர்கள் எனப்படும் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

 
இந்நிலையில், ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவாநகரில் உள்ள பயோ மைனிங் மையத்திற்கு 49-வது வார்டில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. குடியிருப்பு பகுதிகள் அருகில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

கடந்த சில நாட்களாக சக்தி நகா, பெரியார் நகர், சூரம்பட்டிவலசு உள்ளிட்ட வெளி பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் ஜீவாநகர் பயோ மைனிங் சென்டருக்கு லாரிகள் மூலம் குப்பைகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும்,  குறிப்பாக  ஈ, கொசு தொல்லை அதிகரித்து வருவதாக புகார்கள் வந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் இன்று காலை குப்பை கிடங்கினை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும், வெளியிடங்களில் இருந்து குப்பைகள் ஏற்றி வருவதை கண்டித்தும் மாநகராட்சி  குப்பை லாரியை ஜீவாநகர் பகுதியில் தடுத்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேலும் குப்பை கிடங்கில் முற்றுகை யிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசாரும்,  மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 வெளியிடங்களில் இருந்து குப்பைகள் இந்த பகுதிக்கு இனி கொண்டுவரப்பட மாட்டாது என்று கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டம் கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Similar News