உள்ளூர் செய்திகள்
மொட்டைக் கடிதங்கள் மூலம் என்னை சிக்க வைக்க முயற்சி
வேலூர் ஜெயில் குடியிருப்பில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் மொட்டைக் கடிதங்கள் மூலம் என்னை சிக்க வைக்க முயற்சி செய்வதாக ஜெயில் சூப்பிரண்டு குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர்:
வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயில் சூப்பிரண்டாக ருக்மணி பிரியதர்ஷினி கடந்த ஓராண்டுக்கு மேலாக உள்ளார். இவர் பதவிக்கு வந்த பிறகு சிறை விதிகளுக்கு மாறாக பல செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார்களின் அடிப்படையில், கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், வேலூர் ஜெயிலில் விசாரணை நடத்தினார்.
இதன் ஒரு பகுதியாக சிறைக்காவலர் குடியிருப்பு வளாகத்தில் பூட்டியிருந்த உதவி சிறை அலுவலர் குடியிருப்பு ஒன்றில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பெட்டியில் இருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணம் வேலூர் சரக டி.ஐ.ஜி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் அதிர்ச்சிகரமான மேலும் பல புகார்கள் வந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் விதிமீறல்கள் நடந்ததா வெளியாட்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி கூறியதாவது:-
Ôஇந்த பிரச்சினையில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்னை சிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். கடலூர் ஜெயிலில் இருந்து நிர்வாக அலுவலர் ஒருவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலூர் மத்திய சிறைக்கு அயல்பணியாக மாற்றப்பட்டார்.
சென்னையை சேர்ந்த அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அடிக்கடி சென்னை சென்று வந்தார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னை செல்ல முடியாத நிலை இருந்ததால் தான் தங்குவதற்கு ஒரு குடியிருப்பு வழங்க வேண்டும் என்று கோரினார். அவருக்கு உதவி சிறை அலுவலர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர் கடலூர் ஜெயிலுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
அந்த அறையை இதுவரை அவர் ஒப்படைக்கவில்லை.தற்போது, அந்த அறையில் இருந்துதான் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், அந்த நிர்வாக அலுவலர் நேற்று எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு வேலூரில் உள்ள தனது குடியிருப்பில் சோதனை நடைபெற்றதாகவும் அங்குள்ள பெட்டி மற்றும் சில பாத்திரங்களை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரினார். பெட்டியில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து மனுவாக எழுதிக்கொடுக்கும்படி தெரிவித்துள்ளேன். இந்த ஆடியோ உரையாடலை விசாரணையின் போது சமர்ப்பிப்பேன்.
என் நிர்வாகத்தில் தவறு நடக்க விடமாட்டேன்.தவறு செய்தவர்களைத் விடவே மாட்டேன். இதனால் என் மீது தவறாக மொட்டை கடிதம் அனுப்பி உள்ளனர். இதன்மூலம் என்னை சிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். என் நேர்மை என்னை காப்பாற்றும்.
கடவுள் அருளால் என் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூபிப்பேன் என்றார்.