உள்ளூர் செய்திகள்
கொலையான தொழிலாளி பிணத்துடன் பெண்கள் சாலை மறியல்
வேலூர் அண்ணா சாலையில் கொலையான தொழிலாளி பிணத்துடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனிவாசன் (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார்.
நேற்று குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரை அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சீனிவாசன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை எஸ்.எஸ்.கே. மானியம் தெருவைச் சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே அண்ணா சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் ஆம்புலன்சில் அந்த வழியாக கொண்டு வரப்பட்டது. அதனை பொதுமக்கள் மடக்கினர்.
ஆம்புலன்சிலிருந்து சீனிவாசன் உடலைக் இறக்கி சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பிணத்தை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எஸ்.எஸ். கே.மானியம் தெருவில் கஞ்சா மது விற்பனை அமோகமாக நடக்கிறது.
இதனை போலீசார் கண்டு கொள்வதே இல்லை. 24 மணி நேரமும் எது கேட்டாலும் அங்கு கிடைக்கும். தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அடிக்கடி கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
கஞ்சா, மது போதையில் தெருவில் நின்று அட்டகாசம் செய்கின்றனர்.
இதனைத் தட்டிக் கேட்டால் பாட்டில் மற்றும் கத்தியால் வெட்டி தாக்குகின்றனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கவும் முறையான பாதுகாப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.கே. மானியம் தெருவில் கஞ்சா மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.