உள்ளூர் செய்திகள்
சுடுகாட்டு பிரச்சினையில் சுமுக முடிவு ஏற்படாததால் பதட்டம்
திருவண்ணாமலை வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பிரச்சினையில் சுமுக முடிவு ஏற்படாததால் தொடர்ந்து அங்கு பதட்டமாக காணப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது. இதில் ஒருதரப்பினர் தாக்கப்பட்டு வீடுகள் சேதம் அடைந்தது.
தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் டில்லியிலிருந்து பார்வையிட வந்தார். அவரை வீரலூர் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து டி.ஜி.பி. ரவி, ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், ஐ.ஜி.க்கள் சந்தோஷ்குமார், செந்தாமரைக்கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, கலெக்டர் முருகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் .பின்னர் அங்கேயே சுமார் 15 நிமிடங்கள் சம்பவம் குறித்து பேசினர்.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட தெருவில் ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டனர். இதன் பின்னர் மேல் சோழங்குப்பம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹால்டர் பேசும்போது கூறியதாவது:-
வீரளூர் கிராமத்தில் சுடுகாடு பாதை பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கலவரம் நடந்து இருப்பது மிகவும் வேதனை அளக்கிறது. இன்னும் 24 மணி நேரத்தில் சாதி மத பேதமில்லாமல் அனைவரும் ஒரு வழியில் செல்லுமாறு சுடுகாட்டுப் பாதையை தேர்வு செய்தாக வேண்டும். மேலும் சாதி மதத்தை தூண்டி விடுபவர்கள் யார் ? யார் ? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கலவரத்தை உண்டாக்கியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற்று கொலை முயற்சி வழக்காக மாற்ற வேண்டும் .அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் 41 பேருக்கு மட்டும் அரசின் நிதியை வழங்கியது தவறு. இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் அறிந்து அனைவருக்கும் அரசின் நிதி வழங்க வேண்டும்.
மேலும் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடக்கூடாது. அனைவருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் வருகையையொட்டி கலச பாக்கத்தில் இருந்து வீரளூர் கிராமம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதன் பின்னரும் சுடுகாடு பாதை பிரச்சினையில் சுமூக முடிவு ஏற்படாததால் வீரளூர் கிராமத்தில் தொடர்ந்து பதட்டமான நிலைமை நிலவுகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். வீரளூர் கிராமத்தில் மீண்டும் எந்த பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.