உள்ளூர் செய்திகள்
டி.டி.வி.தினகரன்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அதிகாரிகளுக்கு கனிமொழி, தினகரன், வைரமுத்து கண்டனம்

Published On 2022-01-27 06:20 GMT   |   Update On 2022-01-27 06:20 GMT
குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை:

சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் நேற்று காலை குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது ரிசர்வ் வங்கி அதிகாரிகளில் சிலர் எழுந்து நிற்கவில்லை. இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ஒரு அரசாணையைகூட படித்து தெரிந்து கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாக பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசைவிட மேம்பட்டவர்களா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது. இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர் காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா? அது சட்டயன்று, அறம். தமிழ்த்தாய் வாழ்த்தும் அப்படியே. சட்டப்படியும் எழுந்து நிற்கலாம். அறத்தின் படியும் எழுந்து நிற்கலாம். இரண்டையும் மறுத்தால் எப்படி? தமிழ்த்தாய் மன்னிப்பாள், சட்டம்...?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News