உள்ளூர் செய்திகள்
காளை முட்டி படுகாயமடைந்த முதியவர் பலி
கே.வி.குப்பம் மாடு விடும் விழாவில் காளை முட்டி படுகாயமடைந்த முதியவர் பலியானார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் கடந்த 21-ந்தேதி மாடுவிடும் விழா நடந்தது.
இதில் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 62) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை பார்வையாளர்கள் பகுதிக்குள் பாய்ந்தது. அங்கிருந்த வெங்கடேசனை முட்டித்தள்ளியது.
இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த அவரை உடனடியாக பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மாடு விடும் விழாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.