உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவால் மக்களிடம் அதிகரித்து வரும் மன உளைச்சல்

Published On 2022-01-24 09:28 GMT   |   Update On 2022-01-24 09:28 GMT
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் மக்களிடம் மன உளைச்சல் அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை:

உலகில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு தோன்றிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்து விட்டது. அதனை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து தொழில்களும் நலிந்துவிட்டன. 

அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு மக்கள் போராடிய போதிலும் கொரோனா முடிவின்றி தொடர்கிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மன உளைச்சல் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

75 சதவீத மக்கள் வேலைக்கு சென்றால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ளனர். உணவு தேவை நிறைவேறினாலும் மேலும் அத்தியாவசிய செலவுகள் பல உள்ளன. அவைகளை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக மாணவ&மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.வகுப்புகளில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை.  படித்துவிட்டு வேலை பார்ப்பதற்கும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியத்துககு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பாதிக்கும் பணத்தில் அதிக அளவு மருத்துவச் செலவு செய்ய வேண்டியுள்ளது. 

இதனால் மக்கள் வாழ்க்கை அழுத்தம் நிறைந்ததாக மாறிவிட்டது. வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல முடியாமல் பின் நோக்கி தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை மூடி வைத்திருப்பதால் எங்கும் செல்ல முடியாத நிலைமை தொடர்கிறது. வேலைக்காக வெளியூரில் இருப்பவர்கள் தங்களது பெற்றோர்களை சென்று பார்க்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. 

கோவில்களும் வாரத்துக்கு 3 நாட்கள் மூடப்படுகின்றன. இதன் எதிரொலியாக மக்கள் மன அழுத்தத்தை குறைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது.

எனவே மக்கள் மன நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் நலனில் அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News