உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 3-வது வார மாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதையடுத்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்தகங்கள் திறந்து செயல்பட்டன. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் திறந்திருந்தது.
பஸ்கள் ஓடவில்லை. அனைத்து பஸ்களும் டெப்போகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு மீறி வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் 1000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
55 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவிலில் சவேரியார் கோவில் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, செட்டி குளம் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். வெளியே சுற்றி திரிந்தவர்களின் சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.