உள்ளூர் செய்திகள்
திருச்சியில் ஊரடங்கால் வெறிச்சோடிய திண்டுக்கல் சாலை.

முழு ஊரடங்கால் திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வெறிச்சோடின

Published On 2022-01-23 06:54 GMT   |   Update On 2022-01-23 06:54 GMT
தமிழகத்தில் இன்று அமலில் உள்ள மூன்றாவது வார முழு ஊரடங்கால் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்சி:

நாடு முழுவதும் இம்மாத தொடக்கம் முதல் கொரோனா தொற்றின் 3&வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தடுப்பூசிபோடும் பணியும் மும்முரப்படுத்தப்பட்டு உள்ளது.  
இந்தநிலையில் கடந்த 1&ந்தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3&வது அலை மிக வேகமாக பரவத்தொடங்கியது. நேற்று தமிழகத்தில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தலைநகரான சென்னையில் தொற்று கடந்த  சில தினங்களாக குறைந்துவரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக திருச்சியில் நேற்று ஒரே நாளில் 705 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுகாதாரத் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கொரோனா 3&வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் கடந்த 6&ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்தநிலையில் மீண்டும் கடந்த வாரம் 6&ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மூன்றாவது முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி  வரை முழு ஊரடங்கு அமலாகிறது. முழு ஊரடங்கை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக  நிறுவனங்களும் மூடப்பட்டன. 

அத்தியாவசிய தேவைகளான பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அதேபோன்று டாஸ்மாக் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் திருச்சி மாவட்டமே முடங்கியது.
இதேபோல் கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அனைத்து நகராட்சி, ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. 

முன்னதாக நேற்று இரவு 10 மணி வரையிலும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே    இருந்தது. குறிப்பாக இன்று முகூர்த்தநாள் என்பதால் அதற்கு தேவையான மங்கல பொருட்களை வாங்க பூக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட இடங்களில் திருமண கோஷ்டியினர் அதிக எண்ணிக்கையில் குவிந்திருந்தனர்.

அதேபோல் இன்று காலை முதல் திருமண மண்டபங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சாலைகள் வழக்கம்போல் காணப்பட்டன. திருமண அழைப்பிதழுடன் வந்தவர்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்று சென்றனர். அவர்களிடம் விசாரித்த பின்னர்  போலீசாரும் அனுமதி வழங்கினர்.  

திருச்சி மாநகரில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும், புறநகரில் 35 ஆயிரம் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மாநகரை பொறுத்தமட்டில் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பஸ்நிலையம், சத்திரம் பஸ் நிலையம் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதி, பாலக்கரை, என்.எஸ்.பி.ரோடு, மலைக்கோட்டை, பெரிய  கடைவீதி,  தில்லை நகர், உறையூர் பகுதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேபோன்று புறநகர் பகுதியான துவாக்குடி, துறையூர், மணப்பாறை, முசிறி, தொட்டியம், லால்குடி, டால்மியாபுரம், புள்ளம்பாடி போன்ற பகுதிகளில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்டோ, கார், லாரி போன்ற எந்த வாகன போக்குவரத்தும் இல்லை.
Tags:    

Similar News