உள்ளூர் செய்திகள்
வேலூர் கிரீன் சர்க்கிளில் போலீஸ் பூத் சிக்னல் கம்பங்கள் அகற்றம்
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிளில் போலீஸ் பூத் சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டது.
வேலூர்:
வேலூரில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிரீன் சர்க்கிள் பகுதியில் பூங்காவின் அளவினை குறைத்து, வட்ட வடிவிலான பகுதிகளில் 12 மீட்டர் அளவிற்கும் மற்றும் மூன்று இடங்களில் பூங்கா அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் மூலம் காட்பாடியிலிருந்து வேலூர் நோக்கி செல்லும் வாகனங்களும், சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருப்பத்தூர் செல்லும் வாகனங்களும் சிரமமின்றி செல்லும்.
மேலும் கிரீன் சர்க்கிள் பகுதி உட்பட தேசிய நெடுஞ்சாலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையின் இருபுறங்களிலும் உள்ள மழைநீர் வடிகாலானது தற்போதைய சாலை மட்டத்தை விட 1.5 அடி உயரம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
இதனால் வாகனம் செல்லும் வகையில் சாலைக்கு இணையாக கால்வாய் உயரத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலையின் இருபுறமும் 5 மீட்டர் அகலத்திற்கு வாகனங்கள் செல்ல முடியும்.
கிரீன் சர்க்கிள் அளவை குறைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று கிரீன் சர்க்கிள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் பூத் அகற்றப்பட்டது.
மேலும் கிரீன் சர்க்கிள் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பங்களும் இன்று அகற்றப்பட்டன. அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சீரமைத்தனர்.