உள்ளூர் செய்திகள்
கடைகளில் ஆணையர் சரவணக்குமார் ஆய்வு

கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் அனுமதி ரத்து

Published On 2022-01-21 14:57 IST   |   Update On 2022-01-21 14:57:00 IST
தஞ்சையில் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆணையர் சரவணக்குமார் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி எல்கைக்குட்பட்ட இடங்களில் உள்ள கடைகள், 
வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து 
மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகரில் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் மாநகராட்சியிடம் 
உரிய அனுமதி பெற்று தான் கட்ட வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவில் 
பார்க்கிங் வசதி இருக்க வேண்டும். 

இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பொது கட்டிடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம். அந்த வகையில் ஆண்டுதோறும் கட்டிட உரிமத்தை தாசில்தாரிடம் சமர்பிக்க வேண்டும். 

அப்போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். கண்காணிப்பு கேமரா பொருத்தினால் குற்ற செயல்கள்  வெகுவாக குறையும். 

ஒருவேளை குற்ற செயல் நடந்தால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிக்க உதவும். இதன் மூலம் குற்ற செயல் இல்லா மாநகராக தஞ்சை உருவாகும்.

எனவே மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் உள்ள பொது கட்டிடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை தற்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை என்றால் அது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்படும். அப்படியும் பொருத்தவில்லை என்றால் 
அனுமதி ரத்து செய்யப்படும்.

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 
ரூ.2.5 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News