உள்ளூர் செய்திகள்
கலெக்டர்

வீடுகளுக்கு மானியத்தில் சூரிய மின்சக்தி சாதனம்-கலெக்டர் தகவல்

Published On 2022-01-21 14:48 IST   |   Update On 2022-01-21 14:48:00 IST
தஞ்சை மாவட்டத்தில் வீடுகளுக்கு 40 சதவீத மானியத்தில் சூரிய மின்சக்தி சாதனம்பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது அனைத்து தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் சாதனம் வீடுகளின் மேற்கூரையில் நிறுவுவதற்கு அரசு நிர்ணயித்த தொகையிலிருந்து 40 சதவீதம் மானியம் 
அரசு அறிவித்துள்ளது. 

இவ்வாறு அமைக்கப்படும் சூரிய ஒளி மின் சாதனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அமைப்பவர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள மின்சாரமானது மின் வாரியத்திற்கு நிகர அளவி மூலம் அனுப்பப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவது முற்றிலும் குறைக்கப்படுகிறது. 

மேலும் அதிகமான மின் கட்டணம் செலுத்தும் குடும்பதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் சூரிய மின்சக்தி சாதனம் அமைத்து தங்களுடைய 
மின் செலவினங்களை குறைத்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்படி ஒரு பயனாளி தங்களுடைய மின்சார உபயோக தேவைக்கேற்ப 1 கிலோவாட் முதல் 500 கிலோவாட் வரை பயன்பெறலாம். இம்மானியம் பெறுவதற்கு மின்வாரிய மின் இணைப்புள்ள அனைத்து தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை தகுதியானது ஆகும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள டிஇடிஏ உதவி பொறியாளரை நேரடியாகவும் அல்லது 9385290529, 9385290530 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News