உள்ளூர் செய்திகள்
ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடந்த போது எடுத்த படம்.

ஈசானிய குளக்கரையில் தைப்பூச தீர்த்தவாரி

Published On 2022-01-19 13:55 IST   |   Update On 2022-01-19 13:55:00 IST
திருவண்ணாமலையில் ஈசானிய குளக்கரையில் தைப்பூச தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களில் நதிகள் மற்றும் குளங்களில் பல்வேறு தீர்த்தவாரி நடைபெறும்.

இதில் முக்கியமான தீர்த்தவாரி தை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசனானிய குளத்தில் நடக்கும் தீர்த்தவாரி ஆகும்.

கோவில் வரலாற்றின்படி திருவண்ணாமலையில் அமைந்துள்ள பகுதி "அண்ணா நாடு "என்று அழைக்கப்பட்டது.இந்த பகுதியை வல்லாள மகாராஜா என்ற மன்னன் ஆண்டு வந்தார். 

அவரின் தீவிர பக்தனாக இருந்த மன்னருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர் தனது மனைவியுடன் தினசரி கோவிலுக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கி குழந்தை வரம் கேட்டு வந்தார்.

ஒரு நாள் இறைவன் மன்னன் கனவில் தோன்றி "உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை.என்னையே மகனாக பாவித்து கொள். 

இந்தப் பிறவியில் நானே உனது மகன் "என்று கூறினார்.அதன்படி அருணா சலேஸ்வரரை குழந்தையாக பாவித்து சிறந்த முறையில் மன்னன் அரசாட்சி செய்து வந்தார்.

இதற்கிடையில், ஈசானியத் துக்கு அருணா சலேஸ்வரர் ரூபமாக உற்சவர் சந்திரசேகர் தீர்த்தவாரி சென்றபோது போர்க்களத்தில் கயவர்களால் நல்லாள் மகாராஜா தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் கிடைக்கிறது.

இதை தீர்த்தவாரி சென்ற இறைவனிடம் தெரிவிப்பார்கள்.இதனால் மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு சந்திரசேகர் திரும்புவார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்த்தவாரி கோவிலில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள ஈசானியகுளத்தில் இன்று காலை வழக்கம்போல் நடைபெற்றது.அப்போது அஸ்திரதேவர் என்றழைக்கப்படும் சூலத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் ஈசானிய குளக்கரை மண்டபத்தில் எழுந் தருளினார்.அங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி-அம்மன் புறப்பட்டு கோவிலுக்குச் சென்றனர்.

Similar News