உள்ளூர் செய்திகள்
விளைநிலம் வழியாக சடலத்தை எடுத்து செல்லும் மக்கள்.

கயத்தாறில் சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் தவிக்கும் மக்கள்

Published On 2022-01-17 09:24 GMT   |   Update On 2022-01-17 09:24 GMT
கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கு மயிலோடை கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கயத்தாறு:

கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்டது வடக்கு மயிலோடை கிராமம். இங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக பல ஆண்டுகளாக ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இடம் இருந்தது.

தற்போது இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சிலர் தங்களது இடம் என்று கூறி அதில் வேலி அமைத்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சடலங்களை எடுத்துச்செல்ல வழிப்பாதை இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பலவேசம்(வயது 60) என்ற பெண் இறந்துவிட்டார். உடனே அவரது உடலை எடுத்துச்சென்ற உறவினர்கள் வேலி அமைத்திருந்த விளைநிலம் வழியாகசெல்ல முயன்றனர். இதில் தகராறு ஏற்பட்டது.

உடனே பஞ்சாயத்து தலைவர் வள்ளி செந்தில் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக விளைநிலம் வழியாக உடலை எடுத்து செல்ல ஏற்பாடு செய்தார்.

தங்களுக்கு சுடுகாட்டிற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து தரவேண்டும் என்று அந்த காலனி மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News