உள்ளூர் செய்திகள்
தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர்.

ராமேசுவரம் கோவிலில் தைப்பூச திருவிழா

Update: 2022-01-17 09:15 GMT
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்களின்றி நடந்தது.
ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தைப்பூச தெப்ப திருவிழா இன்று கோவில் வளாகத்தில் நடந்தது. கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதித்தும், கோவிலில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகளை கோவில் வளாகத்திலேயே நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் ராமேசுவரம் ராமநாதசுவாமி  கோவிலுக்கு சொந்தமான உப கோவிலான லட்சுமண தீர்த்தக்குளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச தெப்பத்திருவிழா பக்தர்களின் நலன் கருதி அங்கு நடைபெறவில்லை. அந்த திருவிழா நிகழ்ச்சி இன்று  கோவில் வளாகத்தில் நடந்தது. 

நிகழ்ச்சியையொட்டி கோவிலில் அதிகாலையில் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவ தீர்த்தத்துக்கு வருகை தந்து, புனித நீராடி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனர். 

அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி கோவில் 3-ம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேஷ்கார் கமலநாதன், முனியசாமி, தபேரா முத்துக்குமார் உள்பட பணியாளர்கள், குருக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News