உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் இறந்தார்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த நாட்டறம்பள்ளி தாலுக்கா பெரிய கோனாபட்டு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் வெற்றிவேல் (வயது18). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மேல் அச்சமங்கலம் பெரிய ஏரிக்கரை கீழ் பகுதியில் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் மாலை வெற்றிவேல் நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச பம்ப் செட்டில் மோட்டார் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. பின்னர் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.