உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் குட்கா சப்ளை செய்தவர்களிடம் கார்-ரூ.44 ஆயிரம் பறிமுதல்
நாகர்கோவிலில் குட்கா சப்ளை செய்தவர்களிடம் இருந்து கார் மற்றும் ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து கன்னியாகுமரி நாகர்கோவில் தக்கலை குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குட்கா புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் குளச்சல் சப் இன்ஸ்பெக்டர் சணல் குமார் தலைமையிலான போலீசார் மண்டைக்காடு பகுதியில் குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மண்டைக்காடு, பாக்கியபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(வயது65) மற்றும் கூத்த விளை பகுதியை சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 14கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் இவர்களுக்கு குட்கா, புகையிலைப் பொருட்களை வினியோகம் செய்தது பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த அந்தோணி ஜெயஹேன்சன் (50), லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (54) மற்றும் குலசேகரம் பகுதியை சேர்ந்த கபீர் (46) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார், 9.200 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும் ரூ. 44,100- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் களிடம் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் விசாரணை மேற் கொண்டார். குட்கா புகையிலை விற்பனை செய்வதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.