உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாளை தேரோட்டம்
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் வாகன பவனி அபிஷேகங்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 14-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. 8-ம் திருவிழாவான இன்று காலை நாகராஜர் மற்றும் அனந்த கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
இன்றும் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. இதனால் கோவில் நுழைவுவாயில் மூடப்பட்டிருந்தது. கோவில் வாசலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டிருந்தது.
9-ம் திருவிழாவான நாளை 18-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.கொரோனா பரவல் காரணமாக தேரோட்டத்தை எளிய முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தேரோட்ட விழாவில் 400 பேர் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேரோட்ட விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களில் இரண்டு தடுப்பூசியும் செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு ஊசி செலுத்தி அவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்து பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.பாஸ் பெற்றவர்கள் மட்டுமே தேரோட்ட விழாவில் கலந்து கொள்ள முடியும். மற்றவர்கள் தேரோட்ட விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட மாட்டார்கள்.
தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஒன்பதாம் திருவிழாவான 18-ந்தேதி இரவு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் திருவிழா அன்று காலை நாகராஜாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.