உள்ளூர் செய்திகள்
களையிழந்த ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி

காணும் பொங்கல் நாளில் முழு ஊரடங்கு - களையிழந்த ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி

Published On 2022-01-16 09:16 GMT   |   Update On 2022-01-16 09:16 GMT
காணும் பொங்கல் நாளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் மட்டுமின்றி அரசின் சுற்றுலா துறைக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தற்போது பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில் இந்த முழு ஊரடங்கால் விழாக்கள் களையிழந்துள்ளன.

பொங்கல் கொண்டாட்டத்தின் 3-வது நாளான இன்று காணும் பொங்கலாகும். பொதுவாக காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் அருகில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்து உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு, டெல்டா பாசனத்துக்கு பிரதானமாக திகழும் மேட்டூர் அணை மற்றும் அதையொட்டி உள்ள பூங்கா, ஈரோடு - சேலம் மாவட்டத்தை இணைக்கும் பூலாம்பட்டி பரிசல்துறை, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் கோட்டை, ஆஞ்சநேயர் கோவில், கொல்லிமலை, திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற இடங்கள் உள்ளன. காணும் பொங்கலில் வழக்கமாக இந்த பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.

மேட்டூர், ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படும். பொதுமக்கள் வருகையை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கும். வியாபாரிகள் விதவிதமான பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஓடட்டல்கள் மற்றும் சிறு சிறு கடைகளிலும் கூட விற்பனை அதிகரித்து காணப்படும்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அரசின் தளர்வுகளால் பொதுமக்கள் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த ஆண்டு ஞாயிறு ஊரடங்கு காணும் பொங்கல் நாளில் வந்ததால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்த்து விட்டனர். சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கு நிலை ஏற்பட்டது. எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் ஏற்காடும் இன்று சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் காணும் பொங்கலை கருத்தில் கொண்டு வியாபாரத்தை எதிர்நோக்கி இருந்த ஏற்காடு பகுதி கடைக்காரர்கள், சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள், விடுதிகள் நடத்துவோர் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.

இதேபோல் தமிழகம் முழுவதுமே சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சுற்றுலாவை கருத்தில் கொண்டு வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை கொள்முதல் செய்து இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் மட்டுமின்றி அரசின் சுற்றுலா துறைக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News