உள்ளூர் செய்திகள்
மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்

முழு ஊரடங்கு எதிரொலி- சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி

Published On 2022-01-16 08:37 GMT   |   Update On 2022-01-16 08:37 GMT
கன்னியாகுமரியில் உள்ள அனைத்து கடைகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி:

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரி சனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்பட வழிபாட்டு தலங்களில்கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரி சனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து கடைகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரியில் பஸ், கார், வேன், ஆட்டோ போன்ற எந்த வாகனங்களும் ஓடவில்லை. கன்னியாகுமரியில் அனைத்து வீதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு செல்ல இன்றும் போலீசார் தடை விதித்தனர். கடற்கரைக்கு செல்லும் பாதைகளும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டு இருந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது. கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு இன்றும் தொடர்ந்து படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

கடற்கரை பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் உள்பட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

Similar News