உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது பூங்காக்களுக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் வேலூர் மாநகர பகுதியில் பால் மெடிக்கல் ஆஸ்பத்திரிகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படவில்லை. வேலூர் அண்ணா சாலை, காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, ஆரணி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. காட்பாடி காந்திநகர் மற்றும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, வி.ஐ.டி. சாலை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டத்தின் புறநகர் பகுதியான குடியாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாநில, மாவட்ட எல்லைகள் உட்பட 100- க்கும் மேற்பட்ட இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருவபவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இன்று காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை பூங்கா மற்றும் அமிர்தி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கோட்டை அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
காணும் பொங்கலையொட்டி வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் கோழி ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டன. இதனை அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.