உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கல் தினமான இன்று ஊரடங்கு என்பதால் நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மாமல்லபுரம்:
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த ஆண்டு காணும் பொங்கல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மாமல்லபுரத்தில் குவிந்தனர். அங்குள்ள கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கடற்கரைக்கு செல்வதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் வார இறுதி நாட்களில் தான் பெரும்பாலும் வருகை தருவர். தற்போது வார இறுதி நாட்களில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் சுற்றூலா பயணிகளை நம்பி தொழில் செய்வோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
மாற்று தொழில் செய்வதற்கான பொருளாதார வசதி தங்களிடம் இல்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தும் சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள், நடமாடும் புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.