உள்ளூர் செய்திகள்
குண்டம் திருவிழாவையொட்டி பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்
கோபி செட்டிபாளையம் அருகே குண்டம் விழாவையொட்டி இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோபி:
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் சிறப்பாக நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கட்டுபாடுகளுடன் இந்த ஆண்டு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 30-ந் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
வரும் 12-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வருகிறார்கள். மேலும் மக்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள்.
விழாவையொட்டி பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக வழங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் விறகுகள் குவிந்து வருகிறது. 12-ந் தேதி இரவு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து குண்டம் வளர்க்கப்படுகிறது.
தொடர்ந்து வரும் 13-ந் தேதி காலை 5 மணிக்கு குண்டம் விழா நடக்கிறது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி இல்லை.
பூசாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டும் குண்டம் இறங்குகிறார்கள். இதையடுத்து கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் தேரோட்டம் மற்றும் மலர் பல்லுக்கு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.