உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்

Published On 2022-01-10 09:11 GMT   |   Update On 2022-01-10 09:11 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 

கலெக்டரின் இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் கோவில் வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பதற்கான சான்றுகளை கோவில் ஊழியர்கள் கேட்டு வருகின்றனர். 

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 

இதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தாத பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. 

இந்தநிலையில் அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். 

அதோடு பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

எனவே இன்று முதல் அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் கட்டாயம் அதற்கான சான்றிதழ் அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்திகளை காண்பித்தால் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News