உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

முழு ஊரடங்கை தவிர்க்க வேண்டும் - திருப்பூர் தொழில்துறையினர் வலியுறுத்தல்

Published On 2022-01-10 11:47 IST   |   Update On 2022-01-10 11:47:00 IST
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆர்டர்கள் அதிக அளவில் வந்த நிலையில் நூல் விலை உயர்வு பேரிடியாக உற்பத்தியாளர்களுக்கு அமைந்துள்ளது.
திருப்பூர்:

பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து தொழில் தற்போதுதான் வேகம் எடுக்க துவங்கியது. இச்சூழலில் 3-வது அலை வேகமெடுத்தால் தொழில்துறை கடுமையாக பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

அதேசமயம் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் என்றாலும் தொழிற்சாலைகள் தடையின்றி இயங்குவதற்கு இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணம், தொழில்துறையினரிடம் உள்ளது.

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆர்டர்கள் அதிக அளவில் வந்த நிலையில் நூல் விலை உயர்வு பேரிடியாக உற்பத்தியாளர்களுக்கு அமைந்துள்ளது. ஒரு நெருக்கடியை கடந்தால் அடுத்த நெருக்கடியில் சிக்க வேண்டிய சூழல் தொழில்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது:

கொரோனா 3ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அவர் கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். 

கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தை தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலில் வைரசை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அவற்றை தடுப்பதாக நினைத்து பல நாடுகள் ஊரடங்கை அறிவித்தன. 

தற்போது நமக்கு அவற்றை பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் நாம் ஊரடங்கு அமலாக்க வேண்டிய அவசியமில்லை. முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் ஒமைக்ரான் பாதிப்பை கடந்துவிடலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். எனவே முழு ஊரடங்கை போதுமான வரை தவிர்க்கலாம். 

மேலும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடாது. பாதுகாப்பான சூழலில் பணிபுரிய வேண்டும் என்பதை தொழில்முனைவோர் மட்டுமின்றி தொழிலாளர்களும் நன்குணர்ந்துள்ளனர். தொடர்ந்து தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலே போதும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News