உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று அதிகரிப்பு- செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

Published On 2022-01-09 13:37 IST   |   Update On 2022-01-09 13:37:00 IST
கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். இதனை தவிர்க்க பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா அசுரவேகத்தில் பரவி வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தாம்பரம் சானட்டோரியம் காசநோய் மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுஉள்ளது.

இந்த மருத்துவமனையில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் அறிகுறி உள்ளவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் என வகைப்படுத்தி அறிகுறி உள்ளவர்களை கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் படுக்கைகள், ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் 500 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு உள்ளது.

தாம்பரம் தேசிய சித்தா மருத்துவமனையில் 100 படுக்கைகள், சேலையூர் பாரத் கல்லூரியில் 250 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.

தையூர் அரசு மருத்துவ மனையில் 1000 படுக்கைகளும், எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 600 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு வகைப்படுத்தல் மையம் மூலம் பரிசோதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆர்.டிபி. சி.ஆர். பரிசோதனைகளும் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளன. தினமும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். இதனை தவிர்க்க பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு அறிவித்துள்ள வழி முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News