உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

நுகர்பொருள் வாணிப கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-01-09 13:18 IST   |   Update On 2022-01-09 13:18:00 IST
திருவண்ணாமலையில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து தரமான பொருட்களை வழங்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை:

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் வெல்லம்  தரம்  குறைந்ததாக இருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் பேக்கிங் செய்யப்படும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் தரமாக உள்ளதா? என்று பார்வையிட்டார். பின்னர் அனைத்து பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்து அறிக்கை  சமர்ப்பிக்கும்படி  அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

 மேலும் பொதுமக்கள் குறை கூறும் வகையில் தரமற்ற பொருட்களை வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

இதுபற்றி அலுவலர்கள் கூறும்போது தரமற்ற 2,000 கிலோ வெல்லம் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது மாவட்டத்தில் நேற்று வரை 44 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது என்றனர்.

இந்த ஆய்வின்போது நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின்  இணைப்பதிவாளர்  ராஜ்குமார், சார்பதிவாளர்கள் மீனாட்சிசுந்தரம், தீபன் சக்ரவர்த்தி, உதவி கலெக்டர் வெற்றிவேல், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News