உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை பஸ் நிலையம் வெறிச்சோடி இருப்பதை படத்தில் காணலாம்.

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவண்ணாமலை

Published On 2022-01-09 13:13 IST   |   Update On 2022-01-09 13:13:00 IST
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவண்ணாமலை தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருவண்ணாமலை:

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி திருவண்ணாமலையில் நேற்று இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கினர். இதனால் மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்டவைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று மீன் கடைகள் இரவு 10 மணிவரை செயல்பட்டன.

இதேபோல் இறைச்சி கடைகளிலும் இரவு விற்பனை நடைபெற்றது. திருவண்ணாமலையில் இருந்து இன்று பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் அனைத்து வாகன போக்குவரத்து முற்றிலும் நின்று போனதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் திரிபவர்களை எச்சரித்து அனுப்பினர். வழக்கமாக நடைபயிற்சிக்கு செல்லும் மக்கள் கூட்டமும் இன்று குறைவாகவே காணப்பட்டது. 

மக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும் வகையில் மருந்துக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆகியவை மட்டும் செயல்பட்டன. டீக்கடைகள் திறக்கப்படாததால் காலையில் டீ குடிக்கச் செல்லும் மக்கள் ஏமாற்றமடைந்தனர். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கினர். பலர் தொலைக்காட்சி முன்பு இருந்து தங்களது நேரத்தை போக்கினர்.

இதேபோல் ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், சேத்துப்பட்டு, கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூரில் மக்கள் நடமாட்டமில்லாமல் சாலைகள் வெறிச்சோடியது.

Similar News