உள்ளூர் செய்திகள்
நாளை முழு அடைப்பு என்பதால் பெரிய மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

காய்கறி-மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

Published On 2022-01-08 16:10 IST   |   Update On 2022-01-08 16:10:00 IST
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் காய்கறி, மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் காய்கறி, மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துஉள்ளது.

இந்நிலையில் பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. பஸ் போக்குவரத்தும் இருக்காது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் நாளை முழுவதுமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் பெரியார்நகர், சம்பத்நகர், கோபி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் 5  இடங்களில் செயல்பட்டு வரும் உழவர்சந்தையும் நாளை முழுவதுமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை வ.உ.சி. பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே தெரிந்தது. 

இதேபோல் பெரியார்நகர், சம்பத்நகரில் உள்ள உழவர்சந்தையில்  மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முககவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்துக் காய்கறிகளும் வேகமாக விற்றுதீர்ந்தன. சில காய்கறிகள் விலையும் அதிகமாகஇருந்தது.

இதேபோல் முக்கிய கடை வீதிகளிலும் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கொங்கலம்மன்கோவில்வீதியில் உள்ள மளிகை கடையில் மக்கள் கூட்டம் இன்று அதிகமாகவே இருந்தது. 

கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி அந்தியூர் மொடக்குறிச்சி கொடுமுடி என மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

இதேபோல் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டிருந்து. 

பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து மீன்களை வாங்கி சென்றனர். இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் நாளை டாஸ்மாக் கடைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இன்று டாஸ்மாக் கடையில் வழக்கத்தைவிட குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாளை டாஸ்மாக் கடை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சரக்குகள் கையிருப்பு அதிக அளவில் இருந்தது. குடிமகன்கள் தங்களுக்கு வேண்டிய மதுவகைகளை அள்ளிச் சென்றனர்.

Similar News