உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி காரணமாக பொங்கல் ஜவுளி ஆர்டர்களை ரத்து செய்யும் வியாபாரிகள்

Published On 2022-01-08 10:32 GMT   |   Update On 2022-01-08 10:32 GMT
கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, பொங்கலுக்கு பின்னர் தான் முழு ஊரடங்கு விதித்தனர். பெருந்தொகைக்கான விற்பனை நடந்தது. ஆனால் இந்தாண்டு தற்போதே கட்டுப்பாடு விதித்ததால் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் 270 தினசரி கடைகள் உள்ளன. திங்கள் முதல் செவ்வாய் இரவு வரை 700-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகள், இதனை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த பல்வேறு கடைகள் இயங்குகின்றன.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல வெளி மாநில மொத்த, சில்லறை விற்பனை வியாபாரிகள் இங்கு வந்து பெட்ஷீட், துண்டு, லுங்கி, வேட்டிகள், பனியன், நைட்டி, குழந்தைகளுக்கான ஆடை, விதவிதமான வீட்டு பயன்பாட்டு துணிகள் என ஏராளமானவை குறைந்த விலையில் மொத்தமாக, சில்லரையாக விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன் இங்கு மொத்த, சில்லறை ஜவுளி விற்பனை அதிகம் நடக்கும். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நேற்று முன்தினம் முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்ததால், இங்குள்ள வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

ஓணம், தீபாவளி, கிறஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை போல, பொங்கல் பண்டிகைக்காக கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமாக பெட்ஷீட், லுங்கி, துண்டு, நைட்டி உள்ளிட்ட ஆடைகள், குளிர்கால ஆடைகள் வாங்கி செல்வார்கள்.

கடந்த ஒரு வாரமாக இந்த விற்பனை நடந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மொத்த விற்பனைக்கு ஆர்டர் கொடுத்தவர்கள், முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் ரத்து செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, பொங்கலுக்கு பின்னர் தான் முழு ஊரடங்கு விதித்தனர். பெருந்தொகைக்கான விற்பனை நடந்தது. ஆனால் இந்தாண்டு தற்போதே கட்டுப்பாடு விதித்ததால் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News