உள்ளூர் செய்திகள்
நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி. கிருஷ்ணராஜ்.

தென்காசியில் நில அபகரிப்பு தொடர்பான 3 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு

Published On 2022-01-08 14:58 IST   |   Update On 2022-01-08 14:58:00 IST
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி 3 பேர் புகார் மனு அளித்தனர். அனைத்து மனுக்களுக்கும் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.
தென்காசி:

தென்காசி  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது.

இங்கு சங்கரன்கோவில் கருத்தானூர் கிராமத்தில் வசித்து வரும் சின்ன நாகப்பன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை சிலர் போலியான ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு பத்திரம் போட்டுள்ளதாகவும், தனது இடத்தை மீட்டுத் தருமாறும் புகார் கொடுத்தார்.

இதேபோல் சங்கரன்கோவில் தாலுகா ஆண்டார்குளத்தை சேர்ந்த ரவி என்பவர் ஈச்சந்தா கிராமத்தில் உள்ள இடம் தொடர்பாகவும், பங்களா சுரண்டையை சேர்ந்த  நேசையா என்பவர் தனது தாத்தாவிற்கு பாத்தியப்பட்ட 22 சென்ட் நிலத்தை  மீட்டு தரக்கோரியும் புகார் மனு அளித்து இருந்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஒரே நாளில் 3 மனுக்களுக்கும் தீர்வு கண்டு பாதிக்கப்பட்ட வர்களின் நிலத்தை மீட்டு போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்  முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
 
துரித நடவடிக்கை மூலம் நிலத்தை மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு, மனு அளித்த 3 பேரும் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர். 

மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளை எஸ்.பி. கிருஷ்ணராஜ் பாராட்டினார்.

Similar News