உள்ளூர் செய்திகள்
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு கல்வி தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி பதிவுத்தாரர்களுக்கு பதிவு செய்து ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி.வகுப்பினர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், பி.சி.மற்றும் எம்.பிசி, இதர வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் முழுவதும் ரூ.600ம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே உரிய தகுதியுள்ள நபர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அளிக்கலாம். அல்லது வேலை வாய்ப்புத் துறையின் www.tnvelaivaaippu.gov.in- என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்தும் அளிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் உரிய சான்று நகல்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அடுத்த மாதம் 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.