உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் சாலையில் வாளுடன் திரிந்த வாலிபர்கள்
திருப்பத்தூரில் சாலையில் வாளுடன் திரிந்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தியேட்டர் அருகில் கஞ்சா போதையில் முகமது ரியாஸ் (வயது 22), காஜாமைதீன் (20) என்ற சகோதரர்கள் வாளுடன் நடந்து சென்று அந்த பகுதியில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தினர்.
சாலையில் சென்றவர்களை கையில் வைத்திருந்த வாளை காட்டி மிரட்டினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. அண்ணன்-தம்பி நடத்திய தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், சிவாஜி, காவலர்கள் அய்யனார், குணசேகரன் ஆகியோர் விரட்டி சென்று முகமது ரியாஸ், காஜா மைதீனை மடக்கி பிடித்தனர்.
அவர்களை திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவரும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. முகமது ரியாசை பிடிக்கும்போது பீட்டர் என்ற போலீஸ்காரருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.
அய்யனார் என்ற போலீஸ்காரரின் செல்போன் உடைந்து சேதம் அடைந்தது.தொடர்ந்து அண்ணன்-தம்பி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.