உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சுகாதார மதிப்பீடு சான்று பெற ஓட்டல்களுக்கு உத்தரவு

Published On 2022-01-07 07:37 GMT   |   Update On 2022-01-07 07:37 GMT
கோவில் அன்னதானம், பிரசாதம் தயாரிப்போர் ‘போக்‘ திட்டத்தில் இணைய அறநிலையத்துறை மூலம் முயற்சிக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை முன்னிலை வகித்தார். பல்வேறு துறை அலுவலர்கள், ஓட்டல், உணவு பொருள் உற்பத்தி நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அனைத்து ஓட்டல், பேக்கரி, மளிகை மற்றும் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் உரிய வகையில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று இயங்க வேண்டும். பில்களில் உரிம எண் குறிப்பிட வேண்டும். 

தேங்காய் எண்ணையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சல்பர் பயன்படுத்த கூடாது. சமையல் எண்ணையை ஒரு முறைக்கு மேல் மீண்டும் பயன்படுத்த கூடாது. ஓட்டல்கள் சுகாதார மதிப்பீடு சான்று பெற வேண்டும்.

கோவில் அன்னதானம், பிரசாதம் தயாரிப்போர் ‘போக்‘ திட்டத்தில் இணைய அறநிலையத்துறை மூலம் முயற்சிக்க வேண்டும். தள்ளுவண்டி மற்றும் சாலையோர உணவகங்களில் பணியாற்றுவோருக்கு உணவு தயாரிப்பு பாதுகாப்பு குறித்து அடிப்படை பயிற்சி அளிக்க வேண்டும்.

கடைகள், ஓட்டல்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் உரிய வகையில் தொற்று பரவல் தடுப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News