உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சாலையை சீரமைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-01-06 14:47 IST   |   Update On 2022-01-06 14:47:00 IST
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர அடைக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு:

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர அடைக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். 

ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட மூலப்பாளையம், ஜீவானந்தம் வீதி, ஸ்டாலின்வீதி, ராஜீவ்வீதி, சீனிவாசராவ்வீதி உள்ளிட்ட பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிக்காகவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிக்காகவும் ரோடுகள் தோண்டப்பட்டன. அதன் பின்னர் குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டன. அவை சரிவர மூடப்படாததால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

மேலும் ரோடுகள் புதர் மண்டியும் காணப்படுகிறது. இதன் காரணமாக பாம்பு, தேள் உள்ளிட்ட விஷபூச்சிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த ரோட்டை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். 

ரோட்டை சீரமைக்க கோரி பலமுறை மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகத்திலும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் மற்றும்  4-ம் மண்டல உதவி ஆணையாளர் வடிவுக்கரசி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

Similar News