உள்ளூர் செய்திகள்
திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க ஏதுவாக எதிர்வரும் 08.01.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைந்துள்ள தனி வட்டாட்சியர்கள் (குடிமைப்பொருள் வழங்கல்) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இது தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் திருநங்கைகள் புகைப்படம், ஆதார் அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் தொடர்பான சான்று வழங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
விண்ணப்ப ஆவணங்கள் சிறப்பு முகாமிலேயே இணையதள முகவரியில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பதிவேற்றம் செய்யப்படும்.
எனவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள புதிய மின்னணு குடும்ப அட்டை கோரும் திருநங்கைகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.